டாக்சி, தனியார் வாடகை கார் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிமுறைகள்

தனியார் வாடகை கார் நிறுவனங்கள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நிலப்போக்குவரத்து ஆணையம் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து நிறுவனங்களைப் போல் இந்த நிறுவனங்களும் பயணிகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசெல்லும் போக்குவரத்துச் சேவையை வழங்குவதால் அவற்றுக்கு உரிமங்களைக் கட்டாயமாக்கத் திட்டமிடுவதாக ஆணையம் இன்று தெரிவித்தது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் வாடகை வாகன நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது ஆணையம் அவற்றைப் போக்குவரத்துச் சேவை நிறுவனங்களாகக் கருதாமல் தொழில்நுட்ப நிறுவனங்களாகக் கருதியது. 

முன்பதிவு வாகனச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியது. 

“தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பில் டாக்சி நிறுவனங்களுக்கும் தனியார் வாடகை வாகன நிறுவனங்களுக்கும் விதிமுறைகள் தனித்தனியே உள்ளன. பயண முன்பதிவுச் சேவைகளை வழங்கும் இந்த இருவகை நிறுவனங்களுக்கும் இப்போது பொதுவான விதிமுறைகள் ஏதும் இல்லை,” என்று நிலப்போக்குவரத்து ஆணையம் விளக்கியது. 

தற்போது நடப்பில் இருக்கும் டாக்சி சேவை நிறுவன உரிமம், மூன்றாம் தரப்பு முன்பதிவு சான்றிதழ் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு செயல்படுத்தப்படும் என்று ஆணையம் சொன்னது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த நிலப்போக்குவரத்து ஆணையம் பல்வேறு வழிகளைத் தொடர்ந்து ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

தனியார் கார் நிறுவனங்கள் சேவையைத் தொடங்கியது முதல் வாகன விபத்துகள் அதிகரித்திருப்பதாக மோட்டார் காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் ஆரம்பக்கட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு, யாரை வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லும் உரிமையை ஓட்டுநர்களுக்கு வழங்கும். ஓட்டுநர்கள் பிரத்தியேக ஏற்பாடுகள் கொண்டிருப்பதை புதிய கட்டமைப்பு தடை செய்யும் என்று ஆணையம் கூறியது.

புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப டாக்சி நிறுவனங்களும் தனியார் கார் நிறுவனங்களும் மன்றம் செயல்படுவதை உறுதிசெய்யும் என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது.