கூட்டு மாணவர் சேர்க்கையின் முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும்

பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவர்களின் கூட்டு மாணவர் சேர்க்கை (ஜெஏஇ) முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்தது. இதன் முடிவுகள் குறுந்தகவல் வழியாக அனுப்பப்படும். ‘ஜெஏஇ’ இணையத்தளத்திலும் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.

மில்லெனியா கல்விக்கழகம் அல்லது தொடக்கக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 7.30 மணிக்குள் தங்களது பள்ளிகளுக்குச் செல்லவேண்டும். பலதுறை தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பள்ளி சேர்க்கை தொடர்பான வழிகாட்டி ஏடுகள் அனுப்பப்படும்.

தங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கக்கல்லூரிக்கு பதிலாக மற்றொரு தொடக்கக்கல்லூரிக்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் தொடக்கக்கல்லூரியை நேரடியாக அணுகலாம் என்று கல்வியமைச்சு தெரிவித்தது.