சிங்கப்பூர் ஆயுதப் படையின் முப்படைகளில் வழங்கப்படும் பயிற்சியின் வேகம் குறைக்கப்படவுள்ளது. பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் பயிற்சி செயல்முறைகளை மறுஆய்வு செய்வதற்காக படைத் தளபதிகளுக்கும் துருப்புகளுக்கும் காலஅவகாசம் வழங்கப்படும். நியூசிலாந்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி ஒன்றில் படுகாயமடைந்த உள்ளூர் நடிகர் அலோய்ஷியஸ் பாங், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தற்காப்புப் படை தலைவர் மெல்வின் ஓங் மேற்கண்ட நடவடிக்கை பற்றி அறிவித்தார். "பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் பயிற்சியின் வேகத்தைக் குறைப்பது குறித்த நடைமுறைகளை மறுஆய்வு செய்யுமாறு முப்படைகளையும் நான் அறிவுறுத்தி உள்ளேன்," என்று லெஃப்டினெண்ட்=ஜெனரல் ஓங் கூறினார். பயிற்சியின் வேகம் குறைக்கப்படுவதால் ஆயுதப் படையின் செயல்பாட்டு ஆக்கத்திறன் பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அவர் வழங்கினார். தயார்நிலை தேசிய சேவையாளராக இருந்த 28 வயது முதல் வகுப்பு கார்ப்பரல் பாங்கின் மரணத்திற்கு காரணமான சூழல் குறித்த மேல் விவரங்கள் நேற்றைய கூட்டத்தில் பகிரப் பட்டன. முழுநேர தேசிய சேவைக்குப் பிந்திய ராணுவப் பயிற்சியின் ஓர் அங்கமாக, கடந்த சனிக்கிழமை நியூசிலாந்தின் 'வையோரு' பயிற்சித் தளத்தில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 'ஹவிட்ஸர்' கவச வாகனத்திற்குள் பழுது பார்ப்புப் பணிகளை பாங் மேற்கொண்டு இருந்தார். அப்போது கவச வாகனத்தின் பீரங்கி இறக்கப்பட்டபோது பாங் அதில் நசுங்கி படுகாயமுற்றார். இதில் அவரது நுரையீரல்கள், இதயம், சிறுநீரகம் கடுமையாகக் காயமடைந்தன. அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவரது நிலைமை மோசமடைய, செயற்கை உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் பாங் வைக் கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கார்ப்பரல் பாங் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு உயிரிழந்தார்.
பயிற்சியின் வேகம் குறைக்கப்படவுள்ளது
2 mins read
-

