முதல் ‘பிடிஓ’ விற்பனை நடவடிக்கையில் 3,100 வீடுகள்

பிடிஓ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் முதல் விற்பனை நடவடிக்கை வரும் பிப்ரவரியில் தொடங்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. ஜூரோங் வெஸ்ட், காலாங், வாம்போ மற்றும் செங்காங் வட்டாரத்தில் 3,100 வீடுகள் விற்பனைக்கு விடப்படவுள்ளதாக வீவக இன்று தெரிவித்தது.

இந்த விற்பனை நடைபெறும் அதே நேரத்தில் முன்னைய விற்பனை நடவடிக்கையிலிருந்து எஞ்சியுள்ள வீடுகள் மீண்டும் விற்பனைக்கு விடப்படும் என்றும் வீவக கூறியது.

இவ்வாண்டில் சுமார் 15,000 வீடுகளை விற்பனைக்கு விட வீவக முடிவு செய்துள்ளது. மறுவிற்பனை விலைக் குறியீடு 2018ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 131.6லிருந்து நான்காம் காலாண்டில் 131.4க்குக் குறைந்துள்ளதாக வீவக கூறியது. 

விற்கப்பட்டுள்ள மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 20.2% குறைந்துள்ளது. கடந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் 7,063 ஆக இருந்த இந்த எண்ணிக்கை நான்காம் காலாண்டில் 5,637க்குக் குறைந்தது.