ஃபேர்பிரைசில் விற்கப்பட்ட உயிருள்ள நண்டுக்குள் புழுக்கள்

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் உயிருள்ள நண்டுகளை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், வீடு திரும்பியபோது இந்த நண்டுகள் மீது புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

திரு ரோவன் சாய், 58,  பீஷான் ‘ஜே8 என்டியுசி’ பேரங்காடியில் மொத்தம் 1.3 கிலோகிராம் எடைக்கு மூன்று உயிருள்ள நண்டுகளை வாங்கினார். நண்டுகளின் விலை 40 வெள்ளி.  நண்டுகளை வீட்டுக்குள் கொண்டுசென்ற திரு சாய் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவற்றைச் சமைப்பதற்குத் தயாரானார். நண்டுகளைப் பையிலிருந்து எடுக்க அதனைத் திறந்து பார்த்தபோது திரு சாய்க்கு ஒரே அதிர்ச்சி. உயிருள்ள அந்த நண்டுகளின் மீது புழுக்கள் சுற்றிக்கொண்டிருந்தன. இதனைக் காட்டும் காணொளி ஒன்றை திரு சாய் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

திரு சாய் அந்த நண்டுகளை உடனே பேரங்காடியிடம் திருப்பித் தந்ததாக அவர் ‘ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார். நடந்தது குறித்துப் பேரங்காடி நிர்வாகியிடம் கேட்டபோது, அந்த நிர்வாகி திருப்தியளிக்கும் வகையில் பதிலளிக்கவில்லை என்று திரு சாய் கூறினார். “இவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தச் சம்பவம் விசாரிக்கப்படவேண்டும். இதே கடையிலிருந்து நண்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் நலமாக உள்ளனரா என்பது உறுதிச் செய்யப்படவேண்டும்,” என்று திரு சாய் கூறினார். 

நண்டுக்காக திரு சாய் கட்டிய பணத்தை பேரங்காடி அவருக்குத் திரும்பத் தந்ததாக ஃபேர்பிரைஸ் ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.