பிரதமரின் அவதூறு குற்றச்சாட்டை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வலைப்பதிவாளர் மனுத்தாக்கல்

வலைப்பதிவாளர் லியோங் ஸி ஹியென், தனக்கு எதிராக பிரதமர் லீ சியன் லூங் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். 

மலேசியாவின் 1எம்டிபி நிறுவனத்திலிருந்து கள்ளப்பணத்தை நல்லப் பணமாக்க பிரதமர்  லீ உதவி செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கட்டுரை ஒன்றை திரு லியோங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்துப் பிரதமர் லீ அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்குக்கு எதிராக திரு லியோங் செய்த மனுத்தாக்கலுக்கு அவரது வழக்கறிஞர் லிம் டீன் மூன்று காரணங்களைச் சுட்டினார். பிரதமரின் அவதூறு வழக்கு “அதிர்ச்சி அளிக்கக்கூடியது, நியாயமற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது” என்று திரு லிம் கூறினார். இந்த மனுத்தாக்கலுக்கு ஆதரவாக திரு லியோங் பிரமாண பத்திரத்தையும் பதிவு செய்திருப்பதாக ‘கார்சன் லா சேம்பர்ஸ்’ சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு லிம் சொன்னார். 

திரு லியோங்கின் மனு பிப்ரவரி 25ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.  அதே தேதியில் திரு லியோங் பிரதமர் லீக்கு எதிராக தொடர்ந்துள்ள பதில் வழக்கை ரத்துசெய்ய பிரதமர் தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் விசாரிக்கும். பிரதமர் லீ ஆரம்பத்தில் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைக்கு எதிராக திரு லியோங் தற்காப்பு வழக்குத் தொடர்வதுடன் திரு லீ நீதிமன்ற முறையைத் தவறாகப் பயன்படுத்தியதாக வாதிடும் எதிர் வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளார். பிரதமர் லீ பற்றிய செய்திக் கட்டுரையைத் தன்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாக திரு லியோங் தெரிவித்தார். 

பிரதமரின் வழக்கறிஞர்கள், திரு லியோங்கின் எதிர் வழக்கை ரத்து செய்ய இம்மாத தொடக்கத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

‘த கவரேஜ்’ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையின் இணைப்பை திரு லியோங் கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். 1எம்டிபி நிறுவனத்திலிருந்து கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க சிங்கப்பூர் வங்கிகள் உதவியதற்குக் கைம்மாறாக பிரதமர் லீயுடன் மலேசியாவின் முன்னைய பிரதமர் திரு நஜிப் ரசாக் ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. 

இக்கட்டுரையைத் திரு லியோங் தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கவேண்டும் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அவரிடம் கூறியதை அடுத்துத் திரு லியோங் அதனை நீக்கினார். ஆயினும், திரு லீக்குக் கேடு விளைவிக்கவேண்டும் என்ற தீய நோக்கத்துடன் திரு லியோங் பொய்யான, ஆதாரமற்ற தகவல்களைக் கொண்ட இந்தக் கட்டுரையைப் பகிர்ந்ததாக பிரதமரின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். இதற்குத் திரு லியோங், தான் தீய நோக்கத்துடன் கட்டுரையைப் பகிரவில்லை என்று தொடர்ந்து கூறுகிறார்.