லக்கி பிளாசா கைபேசி கடையில் போலிசார் அதிரடிச் சோதனை

கடையிலிருந்து ஆவணங்கள், பதாகை, ரசீதுகளைக் கொண்டு செல்லும் போலிஸ் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லக்கி பிளாசா கடைத்தொகுதியில் உள்ள கைபேசி கடையில் போலிசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். பணிப்பெண்களுக்கு அந்தக் கடை சட்டவிரோதமாகக் கடன் கொடுத்ததாக நம்பப்படுகிறது. லக்கி பிளாசா கடைத்தொகுதியில் மூன்று கடைகளை வைத்திருக்கிறது காட்டா ஸ்டோர் நிறுவனம். அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்து சில அட்டைப் பெட்டிகளைக் கொண்டு சென்றனர். அந்தப் அட்டைப் பெட்டிகளில் ஆவணங்களும் ரசீதுகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடையில் மாட்டப்பட்டிருந்த பணம் அனுப்பும் சேவைக்கான பற்றுச்சீட்டுகள்’ என்று விளம்பரம் செய்த பதாகையையும் அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தனர்.

அந்தக் கடையில் போலிஸ் அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குச் சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளர்கள் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டனரா என்பதைக் கண்டறிய போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.