ஸ்கூட் விமானப் பயண ரத்தால் பாதிப்படைந்த 295 பயணிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்கூட் விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 295 பயணிகள் குறைந்தது ஐந்து மணி நேரம் விமானத்திற்குள் காத்திருக்க நேர்ந்தது.

அந்த ‘டிஆர்19’ விமானம், அந்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 1.20 மணிக்கு மெல்பர்னில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.45 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கி இருக்கவேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது என்று ‘ஸ்கூட் விமான நிறுவனம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. 

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ‘எஸ்கியூ248’, ‘எஸ்கியூ218’ எண்களைக் கொண்ட விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டதாக ஸ்கூட் தெரிவித்தது. ஆஸ்திரேலிய நேரப்படி ‘எஸ்கியூ248’ மாலை 6.15 மணிக்கு மெல்பர்னைவிட்டுப் புறப்பட்டதாகவும் ‘எஸ்கியூ218’ பின்னிரவு 1 மணிக்குப் புறப்பட்டதாகவும் ‘ஃபிளைட்ரேடார்24’ இணையத்தளம் தெரிவித்தது.

தாமதத்தின்போது பயணிகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டதாக ஸ்கூட் கூறியது. பயணிகள் மற்ற விமானங்களுக்கு மாற்றப்படும் வேளையில் பாதிக்கப்பட்ட விமானத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் நடந்தன.