சர்ச்சையான ஃபேஸ்புக் பதிவு; ஆசிரியருக்கு கல்வியமைச்சு ஆலோசனை

கல்வியாளர்கள் சமூக ஊடகத்தளங்களில் தாங்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்துக் கவனமாக இருக்கவேண்டும் என்று கல்வியமைச்சுத் தெரிவித்திருக்கிறது. அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் ஆசிரியர் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு குறித்து அந்த ஆசிரியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பின்னர் அந்த ஆசிரியர் தனது வேலையிலிருந்து விலகியதாகவும் கல்வியமைச்சு உறுதிச் செய்தது. 

“கல்வியமைச்சு, வேலையிட நன்னடத்தை குறித்த சில கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களும் தன்னிச்சை முறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இவற்றுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். ஆசிரியர் பணியின் கௌரவத்தையும் நேர்மையையும் கட்டிக்காக்கும் விதத்தில் கல்வியாளர்கள் நடந்துகொள்ளவேண்டும்,” என்று கல்வியமைச்சின் மனிதவள தீர்வுகள், ஆற்றல்கள் பிரிவின் இயக்குநர் தாமஸ் வோங்  ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார். 

தன்னிச்சை முறையில் பணியாற்றிய முன்னைய ஆங்கில ஆசிரியர் லென்னி ரஹ்மான், 34, பிள்ளைகளுக்கு எழுத, படிக்கச் சொல்லிக் கொடுக்காத பெற்றோரைக் குறைகூறும் பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினார். 1,000 முறைக்கு மேல் பகிரப்பட்ட அந்தப் பதிவில் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களில் சிலர் பதிவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் பதிவு எழுதினர்.

பொதுமக்கள் சிலரின் மிரட்டல்கள் தனது பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் அதனால் பள்ளிக்கூடத்தைவிட்டுச் செல்ல முடிவெடுத்ததாகவும் திருவாட்டி லென்னி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

தான் வேலை செய்யும் பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க விரும்பவில்லை என்றபோதும் அந்தப் பதிவை எழுதியதற்காக வருத்தப்படவில்லை என்றும் திருவாட்டி லென்னி கூறினார். தனது கடுமையான கருத்துகள், பிள்ளைகளில் கல்வியில் ஈடுபட முயற்சியே எடுக்காத பெற்றோரை மனதில் கொண்டு எழுதப்பட்டதாகவும் பிள்ளைகளுக்கு ஏற்கெனவே உதவி வரும் பெற்றோரைத் தாம் குறைகூறவில்லை என்றும் அவர் சொன்னார்.

 

Loading...
Load next