14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு

14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் திருடி அவற்றை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

நோயாளிகளின் பெயர்கள், அடையாள எண், தொலைபேசி எண், முகவரி, எச்ஐவி சோதனை முடிவுகள் மற்றும் தொடர்புடைய மருத்துவ சோதனைகளின் முடிவுகள் ஆகியவை கசிந்ததாக சுகாதார அமைச்சு, மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. ஜனவரி 2013 வரை எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்ட 5,400 சிங்கப்பூரர்களும் டிசம்பர் 2011 வரை இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள 8,800 வெளிநாட்டினரும் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுத் தெரிவித்தது.

தகவல் கசிவுக்குக் காரணமாக இருக்கும் மிக்கி ஃபரெரா-புரொசெஸ் என்ற அந்த அமெரிக்க ஆடவர், 2008ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு வந்து தங்கியிருந்தார். எச்ஐவி நோயாளியான அவர், மோசடி, போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களுக்காகவும் தனக்கு அந்த நோய் இருப்பது குறித்து மனிதவள அமைச்சிடம் பொய் கூறியதற்காகவும்  2017ஆம் ஆண்டில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் தேசிய பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைவராக இருந்த மருத்துவர் லர் டெக் சியாங், 36, புரொசெசுக்கு உடந்தையாக இருந்தார். அவரும் புரொசெசும் முன்னாள் காதலர்கள்.

“இந்தச் சம்பவத்தால் விளைந்த பதற்றத்தாலும் கவலையாலும் நாங்கள் வருந்துகிறோம்.” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்டோரை சனிக்கிழமை முதல் தொடர்பு கொண்டுவருவதாக அமைச்சு கூறியது.