நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040: இந்திய சமூகத்தின் கருத்துகளைக் கேட்டறிந்தது ஆணையம்

‘நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040’ பற்றிய பொதுமக்களின் கருத்துகளை அறியும் பொருட்டு நிலப் போக்குவரத்து ஆணையமும் தமிழ் முரசும் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

‘ஒன்றிணைந்து சிங்கப்பூரை எதிர்காலப் போக்குவரத்துக்கு இட்டுச்செல்லுதல்’ எனும் கருப்பொருளைக் கொண்டது போக்கு வரத்துப் பெருந்திட்டம். சிங்கப்பூரில் இன்னும் இருபதாண்டுகளில் உருவாக இருக்கும் போக்குவரத்துத் தேவைகளுக்காக சிங்கப்பூரர்களின் சிந்தனையை இப்போதே தூண்டி அதற்கான தீர்வுகளை மக்களுடன் இணைந்து காண ஆணையம் முயன்று வருகிறது. 

இந்திய சமூகத்தின் குரலைக் கேட்டறியும் பொருட்டுச் சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் சுமார் 40 பேர் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 20 வயது முதல் 83 வயது வரையிலான சிங்கப்பூர் இந்தியக் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முற்போக்குச் சிந்தனையுடனான சுவாரசிய கருத்துகளைப் பரிமாறிய பங்கேற்பாளர்களுடன் நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி தனலட்சுமி கலந்துகொண்டார். நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பங்கேற்பாளர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவையும் வழிநடத்த ஒருவர் நியமிக்கப்பட்டார். 

பல நாடுகளிலும் நடைமுறைப் டுத்தப்பட்டுள்ள சிறந்த திட்டங்களை உதாரணங்களாக எடுத்துக் கூறி மக்கள் தங்களின் பரிந்துரைகளை வழங்கினர். ரயில்களில் குடும்பங்களுக்கென தனிப்பெட்டி, குழந்தைகளுக்கான  தள்ளுவண்டிகளை வைப்பதெற்கென தனி இடம், நடை பயணம் மேற்கொள்பவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் எனப் பங்கேற்பாளர்கள் புத்தாக்க முறைகளில் தங்களின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தனர். 

நடந்து செல்லுதல், மிதிவண்டி ஓட்டுதல், பேருந்து, ரயில்களில் பயணம் செய்தல், பகிர்வுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் முன்னுரைக்கப்பட்டு உள்ளது. 

தொழில்நுட்பம், மின்னிலக்கம் என உலகைப் புரட்டிப்போடும் புதிய தளங்களைக் கொண்டு போக்குவரத்து முறைகளை மேம்படுத்தலாம் என்பது பலரின் யோசனைகளில் பரவலாகத் தென்பட்டது. 
வட்டார வசதிகளுடன் 20 நிமிடங்களிலும் நகர்ப்பகுதியோடு 45 நிமிடங்களிலும் மக்களை இணைப்பது பெருந்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். 

அனைவருக்குமான போக்குவரத்தை அமைப்பதும் அனைவருக்கும் ஆரோக்கியமான, பாதுகாப்பான போக்குவரத்தை அமைப்பதும் மற்ற இரு நோக்கங்களாகத் தெரிவிக்கப்பட்டன. பங்கேற்ற இந்திய சமூகத்தினரின் யோசனைகளுக்கு முன்னுரிமை தரும் கலந்துரையாடலாக நிகழ்ச்சி அமைந்தது.

Loading...
Load next