தெம்பனிஸ் வீட்டில் தனியாக இறந்து கிடந்த 77 வயது முதியவர்

சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். (படம்: வான்பாவ்)

தெம்பனிஸ் ஸ்திரீட் 43, புளோக் 440ல் வசிக்கும் 62 வயது திருவாட்டி ஜமிலா, தமது வீட்டில் வழக்கத்திற்கு மாறான துர்நாற்றம் வீசியதை உணர்ந்தார். அவர் வீட்டைச் சோதனையிட்டதில் படுக்கை அறையின் கூரையிலிருந்து கருஞ்சிவப்பு நிறத் திரவம் கசிந்து இருப்பதையும் அதிலிருந்தே துர்நாற்றம் வந்ததையும் அறிந்தார்.
அது ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அவர், தமது மருமகனிடம் கூறி போலிசிடம் தகவல் கூறச் சொன்னார். போலிஸ் சோதனையின்போது மாதின் வீட்டுக்கு மேல்வீட்டில் 77 வயது ஆடவர் ஒருவர் தரையில் உணர்வின்றி கிடந்ததைக் கண்டனர். அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிசெய்தனர். முதியவர் ஒரு வாரம் முன்னதாகவே இறந்து விட்டதாக வான் பாவ் சீன நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சம்பவம் குறித்துத் தங்களுக்கு நேற்று காலையில் தகவல் கிடைத்ததாகக் கூறிய போலிஸ், முதியவரின் மரணத்தை இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தி விசாரணை நடத்துகின்றனர்.