ஊழல் குறைந்த நிலவரம்: முன்னேறியது சிங்கப்பூர்

பொதுத் துறையில் லஞ்ச ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்று நிலைகளைக் கடந்து முன்னேற்றம் கண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 6வது இடத்திலிருந்த சிங்கப்பூர் தற் போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது. 180 நாடுகளின் கடந்த ஆண்டுக்கான அனைத்துலக ஊழல் கண்ணோட்ட வெளிப் படைத்தன்மை குறியீட்டு நிலவரம் நேற்று வெளியிடப்பட்டதில் சிங்கப்பூர் 100க்கு 85 என்னும் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்திய பட்டியலில் அது 84 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

உலகளவில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் (88), நியூசிலாந்து (87) ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது. முதல் பத்து நிலைகளில் நார்வே (84) ஏழாவது இடத்தையும் நெதர்லாந்து (82), கனடா (81), லக்சம்பர்க் (81) ஆகியன அதற்கு அடுத்தடுத்த நிலைகளிலும் வந்துள்ளன.

100க்கு 100 புள்ளிகளைப் பெறும் நாடு ஊழலற்ற நாடாகவும் பூஜ்யத்தைப் பெறும் நாடும் உலகின் ஆக மோசமான ஊழல் நாடாகவும் கருதப்படுகிறது.அதன்படி பத்து புள்ளிகளை மட்டும் பெற்றுள்ள சோமாலியா உலகளவில் ஊழல் நிறைந்த நாடு என்னும் நிலையைப் பெற்றுள்ளது. அதற்கடுத்த நிலைகளில் தலா 13 புள்ளிகளைப் பெற்ற தென்சூடானும் சிரியாவும் உள்ளன. உலகளவில் 13 நிபுணத்துவ மதிப்பீடுகளையும் வர்த்தகர்க ளின் ஆய்வுகளையும் கொண்டு ஊழல் நிலவரப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.