மூதாட்டியின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்றவருக்குச் சிறை

மூதாட்டியின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்றவருக்குச் சிறை

1 mins read
d0b2b1b6-bd61-4b27-b57b-9b4e854ef7b8
-

ஐம்பது ஆண்டுகளாகப் பாடுபட்டு 1 மில்லியன் வெள்ளி சேமிப்புத் தொகையைச் சேர்த்திருந்த மூதாட்டி அதனை மற்றொருவரிடம் இழந்தார். தேவாலய காப்பாளராகப் பணியாற்றிய இங் குவி ஹுவே, 71 வயது திருவாட்டி ஏலிஸ் சுவாவை ஏமாற்றி இந்தப் பணத்தைப் பெற்றார். பணத்தை முதலீடு செய்து அதனை லாபத்துடன் திரும்பத் தருவதாகப் பொய் கூறி, திருவாட்டி சுவாவிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றார் 70 வயது இங்.

திருவாட்டி சுவா, இழந்த தொகையிலிருந்து 120,000 வெள்ளியை மட்டுமே திரும்பப் பெற முடிந்ததாக அரசாங்க வழக்கறிஞர் டான் பெய் வெய் கூறினார்.

நீதிமன்றத்தில் 23 குற்றச்செயல்களைச் செய்ததாக ஒப்புக்கொண்ட இங்கிற்கு நேற்று ஆறு ஆண்டு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் தண்டனையை விதித்தபோது இங் மீது சுமத்தப்பட்டிருக்கும் மேலும் 106 குற்றச்சாட்டுகளையும் கருத்தில் கொண்டது.

2011ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையே இங் மேலும் எழுவரைக் குறிவைத்து ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து 1,600 வெள்ளியையும் மகளாகக் கருதிய மற்றொருவரிடமிருந்து 58,000 வெள்ளியையும் இங் ஏமாற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.