இருக்கைவார் அணியாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர், தன்னை நிறுத்தச் சொன்ன போலிஸ் அதிகாரிகளைத் தாக்கினார்.
நேற்று முன்தினம் காலை சுமார் 10.30 மணிக்கு, ஜூரோங் டவுன் ஹால் ரோட்டில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலிஸ் அதிகாரிகள், கறுப்புநிறக் காரை ஓட்டிக்கொண்டிருந்த அந்த 27 வயது ஆடவரை நிறுத்தச் சொல்லி அவரைச் சோதனை செய்தனர்.
சோதனையின்போது ஆடவர் ஒத்துழைக்கவில்லை. அவருக்கு எதிராக கைதாணை ஒன்று ஏற்கெனவே இருப்பதைச் சற்று நேரத்திற்குப் பின்னர் அறிந்த போலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டபோது, ஆடவர் திடீரென முரட்டுத்தனமாக மாறி அவர்களைத் தாக்கினார். இறுதியாக போலிஸ் அதிகாரிகள் அந்த ஆடவரை வல்லந்தமாகக் கட்டுப்படுத்தி அவரைக் கைது செய்தனர்.
போதைப் பொருட்கள், போதைப் பொருளுக்கான கருவிகள் மற்றும் குத்துக்கட்டை ஒன்று ஆடவரின் காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தை போலிசாரும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் விசாரணை செய்து வருகின்றனர். பணியில் இருக்கும் பொதுச்சேவை அதிகாரியைத் தாக்கிய குற்றத்திற்காக ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.

