கப்பல் எண்ணெய் தொடர்பான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை; எழுவர் கைது

‘மரின் கேஸ்’ எனப்படும் கப்பல் எண்ணெய் தொடர்பான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கையின் காரணமாக ஏழு பேர் நேற்று முன்தினம் பூலாவ் சுடோங்கிற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையில் 2.7 டன் எடை அளவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

கடல்துறை, துறைமுக ஆணையத்தின் துணையுடன் 33 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக போலிசார் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்களில் மூவர், கடல்துறை சேவை வழங்கும் நிறுவனத்தின் படகைப் பயன்படுத்தியதாகவும் மற்ற நால்வர் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடல்துறை சேவையில் பணியாற்றும் மூன்று ஆடவர்கள், தங்களது வேலையிடத்திற்குத் தெரியாமல் 2.7 டன் எண்ணெய்யைக் களவாடி விற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட படகும் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்கரை காவல் படையும் கடல்துறை, துறைமுக ஆணையமும் இதுபோன்ற சட்டவிரோத கப்பல் எரிபொருள் விற்பனைகளைக் கடுமையாகக் கருதுவதாக போலிசாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நீர்ப்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்கரை காவல் படை தொடர்ந்து பணியாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.