எஸ்சிடிஎஃப் துணை மருத்துவ அதிகாரிகள் தங்களது உடலில் கேமராக்களை அணியவேண்டும்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையைச் (எஸ்சிடிஎஃப்) சேர்ந்த துணை மருத்துவ அதிகாரிகள், 2020ஆம் ஆண்டுக்குள் கேமராக்களைத் தங்களது உடம்பில் அணியவேண்டும் என்று குடிமைத் தற்காப்புப் படை இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

காதில் அணியப்படும் இந்தக் கேமரா, கட்டம் கட்டமாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இந்த கேமராவில் பதிவு செய்யப்படும் காணொளிகள் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அது கூறியது.

குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ வழிமுறைகளை மேம்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. நோயாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான உரையாடல்களும் பதிவு செய்யப்படும். ஆயினும், நோயாளிகளின் அந்தரங்கத்தை மதிப்பதற்காகக் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கேமராவின் காணொளிப் பதிவு நிறுத்தப்படும் என்றது குடிமைத் தற்காப்புப் படை.