மலைப்பாம்பு கடித்த ஆடவர் குணமடைந்து வருகிறார்

ஆர்ச்சர்ட் ரோட்டில் ‘டேங் பிளாசா’ கடைத்தொகுதிக்கு அருகில் காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்றைப் பிடிக்கச் சென்ற ‘என்டிசிமெக்ஸ்’ பூச்சுக்கட்டுப்பாட்டு நிறுவனம், தங்களது ஊழியர்கள் குறித்து பொதுமக்கள் காட்டிய அக்கறைக்காக நன்றி தெரிவித்திருக்கிறது. பாம்பைப் பிடிக்கச் சென்ற நிறுவன ஊழியர்கள் ஐவரில் ஒருவரை அந்தப் பாம்பு கடித்ததைத் தொடர்ந்து அவருக்காக இணையவாசிகள் பலர் தங்களது அக்கறையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

காயமடைந்த ஆடவரின் சதையிலிருந்து அந்தப் பாம்பின் பல் ஒன்றை எடுப்பதற்கு லேசான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார். அந்த ஆடவர் தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக ‘என்டிசிமெக்ஸ்’ நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

பாம்பைக் கட்டுப்படுத்திய ஊழியர்களின் நிர்வாகி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பாம்புகளைக் கையாள்வதற்கான பயிற்சியைப் பெற்றவர் என்றும் அந்நிறுவனம் கூறியது. இருந்தபோதும் பாம்பு தவறாகக் கையாளப்பட்டது என்ற புகாரைப் பெற்றதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெறும் என்று ஆணையம் கூறியது.