கல்வி அமைச்சர்: ஆரம்பக்கல்வியில் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் பங்குண்டு

பிள்ளைகளுக்குப் படிக்கச் சொல்லிக் கொடுப்பதில் ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் பங்கு இருப்பதாகக் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தற்காலிக ஆசிரியராக வேலை செய்திருந்த ஆசிரியர் லென்னி ரஹ்மான் எழுதிய பதிவின் தொடர்பில் எழுந்த விவாதம் குறித்து திரு ஓங் இவ்வாறு கூறினார். பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுக்காத பெற்றோருக்கு எதிராக அந்தப் பதிவில் திருவாட்டி லென்னி, கடுமையான சொற்களை எழுதினார். இதனைத் தொடர்ந்து திருவாட்டி லென்னிக்கு அவரது பள்ளி ஆலோசனை வழங்கியது. அதன் பின், அவராகவே ஜனவரி 22ஆம் தேதியன்று பணியிலிருந்து விலகினார்.

சிங்கப்பூரின் கல்வி அமைப்பின்படி, தொடக்கப்பள்ளியில் பிள்ளைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கப்படுகிறது என்றும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் சிறார்களின் கேட்டல் மற்றும் பேச்சுத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன என்றும் திரு ஓங் தமது பதிவில் குறிப்பிட்டார். இருந்தபோதும் தொடக்கப்பள்ளிக்குப் பிள்ளைகளை நன்றாகத் தயார்ப்படுத்த விரும்பும் பெற்றோர், அவர்களுக்கு முன்கூட்டியே எழுதப் படிக்கக் கற்றுத்தருவது இயல்பு என்றும் இதனால் தொடக்கப்பள்ளி ஒன்றில் சேரும் பிள்ளைகள் பலருக்கு ஏற்கெனவே எழுதப் படிக்கத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் பிள்ளைகள் சிறு வயதினராக இருந்தபோது தானும் தனது மனைவியும் அவர்களுக்கு நிறைய புத்தகங்களைப் படித்துக் காட்டியதாக நினைவுகூர்ந்த திரு ஓங், இவ்வாறு பிள்ளைகளுக்குப் படிப்பதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுடனான பிணைப்பை வலுப்படுத்தலாம் என்றார்.

“பிள்ளைகளின் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் நமது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும். இது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும், வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான பங்காளித்துவம்,” என்றும் அவர் கூறினார்.