அபராதம் கட்டாவிட்டால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது

அபராதத்தை உரிய நேரத்திற்குள் கட்டாத வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை செய்யப்படுவர். வீடமைப்புக் கழகம், நிலப்போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் போலிஸ் படை, நகர மறுமேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து இதனை இன்று அறிவித்தன.

சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு ஏதேனும் அபராதங்கள் இருந்தால் அதனைக் கட்டவேண்டும் என்றும் அவ்வாறு கட்டாதோரைக் கடுமையாகக் கருதுவதாகவும் இந்த அமைப்புகள் கூறுகின்றன.

சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து போலிசாரும் மற்ற அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சோதனை நடத்தி, அபராதம் கட்டாதவர்களைக் கட்டச் சொல்லி வருகின்றனர். ஆயினும், சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் இன்னமும் தங்களது அபராதத்தைத் தொடர்ந்து கட்டாமல் இருந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஐந்து அமைப்புகள் கூறின.

‘ஏஎக்ஸ்எஸ்’ இணையத்தளம், செயலி மற்றும் தீவு முழுதும் உள்ள கட்டண சேவை இயந்திரங்களில் போக்குவரத்து அபராதங்களைக் கட்டலாம்.