எஸ்டி பள்ளி கைச்செலவு நிதிக்காக $38,000 வழங்கிய ஃபேர்பிரைஸ்  

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் பள்ளி கைச்செலவு பண நிதிக்காக என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் $38,000 நிதியை வழங்கியுள்ளது. ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் ‘ஒன் ஃபேர்பிரைஸ் ஃபேமிலி’ முயற்சியின் மூலம் அந்த சில்லறை விற்பனைக் கடைத் தொகுதியின் நிர்வாக, நிறுவனப் பணியாளர்களின் தொண்டூழியம் வாயிலாக இந்த நிதி திரட்டப்பட்டது. அங் மோ கியோ ஹப்பில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடையில் ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங், தலைவர் பாபி சின் ஆகியோர் $38,000ஐ உதவி நிதியாக வழங்கினர். அங்கு வந்திருந்த அந்த நிதியின் மாணவப் பயனாளர்கள் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் $38 வழங்கப்பட்டது. “ஒவ்வொரு குழந்தையும் அதன் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் சமமான வாய்ப்பைப் பெறத் தகுதிபெற்றுள்ளது என நம்புகிறோம்,” என்று திரு சியா குறிப்பிட்டார்.