தாமதமாகக் கிடைத்த மதுக்கடை உரிமம்;  சிங்போஸ்ட் நிறுவனம் விசாரணை 

சைனா டவுன் காம்ப்ளெக்சில் உள்ள ‘குட் பியர் கம்பெனி’ எனும் மதுபானம் விற்கும் கடை ஒன்றில் மதுபானம் விற்பதற்கான உரிமம், அது புதுப்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு கடையின் உரிமையாளர்களில் ஒருவருக்கு கடிதம் மூலம் கிடைத்துள்ளது. அந்தக் கடையில் மதுபானம் விற்பதற்கான உரிமம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி புதுப்பிக்கப்பட்டதைக் காட்டும் கடிதத்தை அந்தக் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு டேனியல் கோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். ஆனால், அந்தக் கடிதம் அவருக்கு கடந்த வியாழக்கிழமைதான் கிடைத்தது. அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட உறையின் மீதுள்ள சிங்போஸ்ட் நிறுவனத்தின் முத்திரையில் 30 ஜனவரி 2019 என்ற தேதியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும் அதன் தொடர்பில் திரு டேனியல் கோவுடன் இணைந்து செயல்படுவதாகவும் சிங்போஸ்ட் நிறுவனம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. புதுப்பிக்கப்பட்ட உரிமத்துக்கான கட்டணத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் மிகத் தாமதமாக தமக்குக் கிடைத்துள்ளது என்றும் திரு கோ குறிப்பிட்டார். தொடர்ந்து செயல்பட்டு வந்த அந்தக் கடை, “இன்று மாலை முதல் உரிமம் புதுப்பிக்கப்படும் நாள் வரை செயல்படாது,” என்று நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பதிவில் திரு கோ குறிப்பிட்டிருந்தார். 
 

Loading...
Load next