இயூபிஎஸ் வங்கியில் சேரும் முன்னாள் எஸ்எம்ஆர்டி தலைவர் டெஸ்மண்ட் குவெக்

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் முன்னைய தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் குவெக், சுவிட்சர்லாந்தின் இயூபிஎஸ் வங்கியில் மற்றொரு பொறுப்பில் சேர்ந்துள்ளார். அந்த வங்கியின் அனைத்துலக நிதி நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவராக அவர் சேர்கிறார் என்று அந்த வங்கி இன்று அறிவித்தது. பிப்ரவரி 18ஆம் தேதி அவர் பணியைத் தொடங்குவார் என்று அந்த வங்கி தெரிவித்தது. திரு குவெக் சிங்கப்பூரில் இருந்தவாறே பணியாற்றுவார் எனக் கூறப்படுகிறது.

திரு குவெக்குடன் பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாக இயூபிஎஸ் வங்கியின் ஆசிய பசிபிக் தலைவர் எட்மண்ட் கோ தெரிவித்தார்.

“மனோதிடம் கொண்ட திரு குவெக், நெருக்கடியான நேரங்களிலும் நிதானத்துடன் நடந்துகொள்பவர். கடுமையான சவால்களைக் கடப்பாட்டுடனும் வைராக்கியத்துடனும் சமாளிப்பவர். புத்தாக்கங்கள், உருமாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையே சிக்கலான வர்த்தகங்களை வழிநடத்திய அவரது அனுபவம், அடுத்த அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இயூபிஎஸ் நிறுவனத்துக்கு நன்கு பயன்படும்,” என்று திரு கோ கூறினார்.

2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றிய திரு குவெக், அதற்குமுன் ராணுவத் தளபதியாக இருந்தவர். சிங்கப்பூர் ஆயுதப் படையின் தலைவராக 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றினார். சுற்றுப்புற, நீர்வள அமைச்சிலும் திரு குவெக்  நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார்.