உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு காசநோய்

சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி ஒருவருக்குக் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து அந்த மாணவி வகுப்புக்குச் செல்லவில்லை. மாணவியின் வகுப்பறை கிருமிக்கொல்லி மருந்தால் சுத்தம் செய்யப்பட்டது.  

இந்த மாணவிக்குக் காசநோய் இருப்பது பற்றிய தகவல் தாமதமாகத் தெரிந்ததாக சக மாணவிகள் சிலரின் பெற்றோர் கூறியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது.

சிங்கப்பூரில் தினமும் சுமார் நான்கு பேருக்கு காசநோய் தொற்றுவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. கடந்தாண்டு 1,450க்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆயினும், இந்நோய் தொற்றியுள்ளோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டு வருகிறது. 2017ஆம் ஆண்டில் காசநோய் தொற்றியுள்ளோரின் எண்ணிக்கை 1,500க்கு அதிகமாகவும் 2016ஆம் ஆண்டில் காசநோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,600க்கு அதிகமாகவும் இருந்தன.

இருமல், தும்மல், உமிழ்தல் ஆகியவற்றின் வழி காசநோய்க் கிருமி பரவுகிறது. காசநோயாளிகளில் பெரும்பாலானோர் குணமடைகின்றனர். மருத்துவ சிகிச்சை செய்யப்படாவிட்டால் அந்த நோயால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.