மின்படிகளில் விபத்து; பெண், பிள்ளைகள் காயம்

மின்படிகளில் விபத்து; பெண், பிள்ளைகள் காயம்

1 mins read
376358c1-eff5-4fb2-961f-ca1a88e6c91b
-

சாங்கி விமான நிலையத்திலுள்ள எம்ஆர்டி ரயில் நிலையத்தின் மின்படிகளில் நடந்த விபத்தில் ஒரு பெண்ணும் அவரது பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 27ஆம் தேதி நடந்தது. காலை சுமார் 5.30 மணிக்கு மின்படிகள் இயங்கத் தொடங்கியதாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் கூறியது. அப்போது மின்படிகள் வழியாகக் கீழே இறங்கியவர்கள் எம்ஆர்டி ரயில் நிலையத்தின் இழுவைக் கதவடைப்பு தரை வரை இழுக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதன் திறப்புக்காக அவர்கள் காத்திருந்தனர். மெல்ல அங்கு கூட்டம் பெருகத் தொடங்கியது.

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இந்நிலையத்தில் ரயில் சேவை வழக்கமாகக் காலை 5.30 மணிக்குத் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளிலோ சேவை காலை ஆறு மணிக்குத் தொடங்கும். அதிக கூட்டத்தினால் குழப்பம் ஏற்பட்டு, சிலர் கீழே சென்றுகொண்டிருந்த படிக்கட்டுகளின் மீது ஏறி மேலே செல்ல முற்பட்டதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கூறியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது. இதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படிக்கட்டுகளின் மீது விழுந்து காயமடைந்தார். அவர் தலையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததாகவும் தாம் அவருக்கு உதவி செய்ததாகவும் ஆஸ்திரேலிய ஆடவர் கூறினார்.

மின்படிகளை இயக்குவதற்கான வழிமுறைகளை ரயில் நிலைய ஊழியர்கள் முறையாகப் பின்பற்றவில்லை என்றும் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.