மகப்பேற்றின்போது உயிரிழந்த ‘லூசி’

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் வசித்து வந்த ‘லூசி’ என்ற பெண் ஒட்டகச்சிவிங்கி, மகப்பேற்றின்போது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 14 வயது ஒட்டகச்சிவிங்கி நேற்று இரவு 7 மணிக்கு மாண்டது.

“லூசியின் கருப்பையிலிருந்து கன்றை வெளியே எடுப்பதற்கான சிகிச்சை நடந்துகொண்டிருந்தபோது அதற்கு மாரடைப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு அதற்கு உயிர்மீட்பு சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆயினும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்து லூசி மாண்டது,” என்று வைல்ட்லைஃப் ரிசர்வ்ஸ் சிங்கப்பூர் ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்தது. 

லூசி கருத்தரித்திருந்ததாகக் கடந்த ஏப்ரல் மாதம் விலங்கியல் தோட்டம் அறிவித்திருந்தது. 2005ஆம் ஆண்டு இஸ்ரேலின் ‘டிஷ்ச் ஃபேமலி’ விலங்கியல் தோட்டத்திலிருந்து லூசி சிங்கப்பூருக்குக் கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. கப்பல் பயணம் 16 நாட்களுக்கு நீடித்தது.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த கடைசி பனிக்கரடி இனுக்காவை சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் இழந்தது.