சிங்கப்பூர்க் கொடியைத் தாங்கிய எண்ணெய்க் கப்பல் விடுவிப்பு

சிங்கப்பூர்க் கொடியைத் தாங்கிய எண்ணெய்க் கப்பல் விடுவிப்பு

1 mins read
f4446d67-c983-46ce-9a54-b5ce61221648
-

கமரூன் கடற்பகுதியில் கடத்தப்பட்ட சிங்கப்பூர்க் கொடியைத் தாங்கிய எண்ணெய்க் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. 'பரென்ட்ஸ் சீ' எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல், கமரூனின் லிம்பே துறைமுகத்தைவிட்டு புறப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்த 26 பணியாளர்களும் எந்த ஆபத்துமின்றி நலமாக இருப்பதாகவும் சிங்கப்பூரில் தளம் கொண்டிருக்கும் 'ஈஸ்டர்ன் பசிபிக் ‌ஷிப்பிங்' கப்பல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரம், தனியார் படை ஒன்றைச் சேர்ந்த துப்பாக்கிக்காரர்கள் அந்த எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றினர். அவர்கள் ஏகே 47 துப்பாக்கிகளை வைத்திருந்தனர். கமரூனைச் சேர்ந்த டிஎஸ்சி மரீன் கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் திரு ஜூல் பிரான்சுவா பமா, பிணைப்பணம் பெறுவதற்காகக் கப்பலைக் கைப்பற்றியதாக 'ஈஸ்டர்ன் பசிபிக் ‌ஷிப்பிங்' அப்போது தெரிவித்தது.

உறுதியான பலம், மீள்திறன், வேலையிட நன்னடத்தை ஆகியவற்றுக்காகக் கப்பலின் 26 பணியாளர்களுக்கும் 'ஈஸ்டர்ன் பசிபிக் ‌ஷிப்பிங்' நன்றி தெரிவித்தது. இவர்களில் இந்தியர்கள், சீனர்கள், துருக்கியர்கள் ஆகியோர் அடங்குவர். கடல்துறை, துறைமுக ஆணையம், சிங்கப்பூர் கடற்படை, கப்பல் பணியாளர்களைப் பிரதிநிதித்த தூதரகங்கள், கமரூனிய அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்நிறுவனம் கூறியது.

"டிஎஸ்சி மரீனின் கட்டொழுங்கு மீறலும் உள்ளூர் மற்றும் அனைத்துலகச் சட்டங்களின் புறக்கணித்தலும் இறுதியில் பலனில்லாமல் போனது. இனி வரும் பிரச்சினைகளைக் கையாள இத்தகைய பகைமைப்போக்கு முறைகள் பயன்படுத்தப்படமாட்டா என்பது எங்களின் மனமார்ந்த விருப்பம்," என்று 'ஈஸ்டர்ன் பசிபிக் ‌ஷிப்பிங்' தெரிவித்தது.