ஆறு ஆண்டுகளாக மாற்றான் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவர்

மாற்றான் மகளை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பெண், 12 வயது முதல் இவ்வாறு துன்பத்திற்குள்ளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நடந்தது குறித்து அந்தப் பெண் 2017ஆம் ஆண்டில் தனது தாயாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலிசில் புகார் செய்யப்படவில்லை. ஆனால் அப்போது 18 வயதை அடைந்திருந்த சிறுமி, தன் சொந்த தந்தையின் வீட்டில் தங்கினார். சில மாதங்களுக்குப் பின்னர் சிறுமி தாயாரின் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மாற்றான் தந்தை மீண்டும் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கினார். சிறுமி ஏன் தாயாரின் வீட்டுக்குத் திரும்பினார் என்பது குறித்து நீதிமன்ற பத்திரங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது பற்றி அந்தப் பெண் மீண்டும் தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவரும் போலிசாரிடம் புகார் கொடுத்தனர். 

பாலியல் பலாத்காரம் தொடர்பான மூன்று குற்றங்களைச் செய்ததை பெண்ணின் மாற்றான் தந்தை இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் 18 பாலியல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தண்டனையை விதித்தபோது கருத்தில் கொண்டது.