$46 மில்லியன் பணத்தை கையாடிய முன்னாள் அலுவலக ஊழியருக்கு 18 ஆண்டு சிறை

$46 மில்லியன் பணத்தை கையாடிய முன்னாள் அலுவலக ஊழியருக்கு 18 ஆண்டு சிறை

1 mins read
039eeaaf-fe69-4a82-a422-d103e9510a84
-

சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமை­யான முன்னாள் கணக்கியல் அலுவலர் ஒருவர், ஏழு ஆண்டு காலகட்டத்தில் தமது முதலாளி­களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி $46 மில்லியனை முறைகேடாக கையாடினார். அவ்வகையில், சூதாட்டத்திற்கு ஒவ்வொரு வாரமும் $100,000க்கும் அதிகமான தொகையை அவர் பயன்படுத்தினார்.

மோசடி குற்றத்திற்காக 69 வயது ரிச்சர்ட் தியாங் டெங் ஹூங்கிற்கு நேற்று 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்­ பட்டது. நிறுவனங்களில் ஊழியராக பணிபுரிந்து நம்பிக்கை மோசடி செய்தது உட்பட தம்மீது சுமத்தப்­பட்ட 15 குற்றச்சாட்டுகளை தியாங் நேற்று ஒப்புக்கொண்டார். 54 வேறு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பதில் கருத்தில்­ கொள்ளப்பட்டன.

அரசு நீதிமன்றம் வழக்கத்திற்கு மாறாக விதித்துள்ள கடுமையான சிறைத் தண்டனையாக இது கருதப்படுகிறது. அதிகபட்சமாக விதிக்கப்படக்­கூடிய 20 ஆண்டு சிறைத் தண்ட­ னையைவிட இது சற்று குறைவு.

நிதி குற்றவியல் தொடர்பாக சிங்கப்பூரின் வரலாற்றிலேயே இது ஆக அதிக அளவிலான பணம் இழப்புச் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இப்போது பணிபுரியாத தியாங், 2007ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குறைந்தது 300 முறையாவது நிறுவனப் பணத்தைக் கையாடிய­தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 1990ஆம் ஆண்டில் 'டபுள் ஏஸ் டிரேடிங்' எனும் நிறுவனத்தில் தியாங் சேர்ந்தார். அந்நிறுவனத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் செயல்பட்டன.

கட்டணச் சீட்டுகளைத் தயார் செய்வது, நான்கு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கைமாறும் நிதியைப் பதிவுசெய்வது உள்ளிட்­டவை தியாங்கின் பணிகள்.