ஆண்டின் தலைசிறந்த மத்திய வங்கியாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தேர்வு

ஆண்டின் தலைசிறந்த மத்திய வங்கியாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தேர்வு பெற்றுள்ளது என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள ‘சென்ட்ரல் பேங்கிங்’ சஞ்சிகை இந்தத் தேர்வைச் செய்துள்ளது.
அச்சஞ்சிகையின் முதன்மை ஆசிரியரும் விருதுக் குழுவின் தலைவருமான திரு கிறிஸ்தஃபர் ஜெஃப்ரி, “சிங்கப்பூரின் மத்திய வங்கி, தனது நிதித் தொழில்நுட்ப முயற்சிகளாலும் நாணயக் கொள்கை, நிதி நிலைத்தன்மை, மேலாதிக்கம் ஆகியவற்றாலும் தனித்து நிற்கிறது,” என்றார்.
1எம்டிபி நிதி தொடர்பில் பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் எடுத்த பல்வேறு அமலாக்க நடவடிக்கைகள் அனைத்துலக ரீதியில் பாராட்டுகளைப் பெற்றன என்று கூறப்பட்டது.
இவ்விருது பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன், “ஆணையத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பிக்கிறேன். அவர்களின் அயராத உழைப்பும் கடப்பாடும் இதற்கு முக்கிய காரணம். மேலும் சிங்கப்பூர் நிதித்துறையின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க எங்களுடன் வலுவாக கைகோர்த்த பல்வேறு துறையினருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள் கிறோம்,” என்றார்.
விருதளிப்பு மார்ச் மாதம் 13ஆம் தேதி லண்டனில் உள்ள ‘சென்ட்ரல் பேங்கிங்’ விருது நிகழ்ச்சியில் இடம் பெறும்.

Loading...
Load next