சிறார்களுடன் பாலியல் உறவுக்காகக் கல்வியமைச்சு ஆசிரியர் கைது

சிங்கப்பூர்க் கல்வியமைச்சின் மொழிக் கல்வி நிலையத்தில் (Language Centre) ஆசிரியராகப் பணியாற்றிய பிரஞ்சு ஆடவர், சிறார்களுடன் பாலியல் உறவு கொண்டதன் தொடர்பில் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 51 வயது ஜோன் கிறிஸ்தொஃப் குவெனொ, சிறுவர் ஒருவருடன் இருந்தபோது போலிசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

ஜோன், பேங்காக்கிலுள்ள ஹுவே குவாங் விளையாட்டரங்கில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆங்கிலம், காற்பந்து ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்க முற்பட்டதாக தாய்லாந்தின நகர போலிஸ் தளபதி மேஜர் ஜெனரல் செனிட் தெரிவித்தார். பின்னர் ஜோன் இந்தச் சிறுவர்களில் சிலருக்குப் பணம் கொடுத்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மேஜர் ஜெனரல் செனிட் கூறினார். ஜோன் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இவ்வாறு செய்து வந்ததாகவும் அவர் சொன்னார்.

“சிங்கப்பூரின் கல்வியமைச்சு மொழிக் கல்வி நிலையத்தின் பிரஞ்சு பிரிவில் ஜோன் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இது குறித்து நாங்கள் உள் அலுவலகச் சோதனைகளைச் செய்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து தாய்லாந்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்,” என்று கல்வி அமைச்சு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தது.

“கல்வி அமைச்சு தனது ஊழியர்களின் முறைகேடான நடத்தையைக் கடுமையாகக் கருதுகிறது. எங்களது நன்னடத்தைக் கோட்பாட்டுக்கு இணங்கி நடக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம். சம்பவங்கள் கடுமையாக இருந்தால் தொடர்புடையவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்,” என்றும் கல்வியமைச்சு கூறியது.