சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் புகைமூட்டம்

சிங்கப்பூரில் தெம்பனீஸ், பிடோக், பாசிர் ரிஸ் உள்ளிட்ட கிழக்கு வட்டாரங்களில் ஏதோ எரிவது போன்ற துர்நாற்றம் வீசுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வட்டாரங்களில் புகைமூட்டம் நிலவி வருவதாக அங்குள்ள வட்டாரவாசிகள் கூறுகின்றனர்.

தெம்பனீஸ் மத்திய பூங்காவில் பொதுமக்கள் சிலர் முகமூடிகளை அணிந்தவாறு காணப்பட்டனர். அத்துடன், தூரத்தில் காணப்படும் கட்டடங்கள் பலருக்குத் தெளிவாகத் தென்படவில்லை என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. 

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு ‘பிஎஸ்ஐ’ காற்றுத்தரக் குறியீட்டில் 63 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இது, 51 புள்ளிகளுக்கும் 100 புள்ளிகளுக்கும் இடையிலான மிதமான பிரிவில் உள்ளது. சிங்கப்பூரின் மேற்குப் பகுதிக்கான ‘பிஎஸ்ஐ’ புள்ளிகள் 26 ஆகவும் வடக்குப் பகுதியில் 35 ஆகவும் மத்திய பகுதியில் 46 ஆகவும் தெற்குப் பகுதியில் 53 ஆகவும் பதிவாகியுள்ளன.