‘முதுமைக்காலத்திலும் தொடர்ந்து துடிப்புடன் செயல்படுவது அவசியம்’   

ST PHOTO: LIM YAOHUI

சிங்கப்பூரர்கள் முடிந்தவரை தொடர்ந்து வேலை செய்யும் சாத்தியத்தை நாடு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் வாழ்நாள் கற்றலை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறினார். 
நேற்று முன்தினம் துடிப்புமிக்க முதுமைக்காலம் தொடர்பில் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் இவ்வாறு பேசினார். துடிப்பான முதுமைக்குப் பிறர் மீது அன்பு காட்டுவது, சமூகத்தில் பங்காற்றுவது ஆகியவற்றுடன் வாழ்நாள் கற்றலும் அமைய வேண்டும் என்றார் அவர். செய்யும் தொழில் ஆர்வம் ஊட்டக்கூடியதாக இருந்தால் அதில் வெகு காலத்திற்கு ஈடுபட மக்கள் விரும்புவார்கள். அத்துடன் மூப்படையும் சமூகத்தை மனதில் கொண்டு வேலை மறு வடிவம் பெறவேண்டும். வெவ்வேறு நபர்களின் திறன்களுக்கு ஏற்ப வேலைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அத்துடன் தொழிலாளிகளின் ஒவ்வொரு பங்களிப்பும் அங்கீகாரம் பெறவேண்டும். “நம் மூளைகள், உடல்கள் வயது காரணத்தால் பாதிப்படைவது உண்டு. அதைத் தவிர்ப்பதற்குத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடுதல், துடிப்புமிக்க முதுமைக்கால வாழ்க்கைமுறையைக் கடைபிடித்தல், தொடர்ந்து பங்களித்தல் அவசியம்,” என்றார் திரு தர்மன்.