அழகுப் பராமரிப்புக் கடை நிர்வாகிக்கு மூன்று ஆண்டுகள் சிறைவாசம்

அழகுப் பராமரிப்புக் கடை நிர்வாகி ஒருவர் மாதக்கணக்காகத் தமது பணிப்பெண்ணைத் துன்புறுத்தினார். கொதிக்கும் வெந்நீரை உடம்பின் மேல் ஊற்றுவது, சலவைத்தூள் கலந்த அசுத்தமான நீரை குடிப்பது போன்ற சுய பாதிப்பு காரியங்களைச் செய்யச்சொல்லி தம் பணிப்பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்.

‘ஏநியூ மி பியுட்டி ஏஸ்தெடிக் சலூன்’ நிர்வாகியான 39 வயது திருமதி லிண்டா சியா லே செ, 15 நாள் விசாரணைக்குப் பிறகு இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டார்.

நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, பணிப்பெண்ணுக்கு $11,800 இழப்பீட்டுப் பணம் தருமாறும் உத்தரவிட்டது. இழப்பீட்டுப் பணத்தை அவரால் தர இயலாவிட்டால், கூடுதலாக ஆறு வாரங்களுக்குச் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.  

திருமதி லிண்டாவின் கணவரான 44 வயது திரு லிம் டுன் லேங், பணிப்பெண்ணைத் தாக்கிய குற்றத்திற்காக ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுபோக $500 இழப்பீட்டுப் பணமும் அவர் கொடுக்கவேண்டும்.

தற்போது இந்தத் தம்பதிக்கு ஐந்து வயது மகள் இருக்கிறாள். இவர்கள் இந்தக் குற்றங்களை 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

துன்புறுத்தலுக்கு இலக்கானதோடு, $700 மாதச் சம்பளத்தையும் அந்தப் பணிப்பெண் பெறவில்லை. சரியான உணவு இல்லாமல் அவரின் உடல் எடையும் 50 கிலோவிலிருந்து 38 கிலோவிற்குக் குறைந்தது.