பிப்ரவரி 18ஆம் தேதி வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்

அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட (பட்ஜெட்) அறிக்கை இம்மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்படும்.
நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றுவார். 
சிங்கப்பூர் பட்ஜெட் இணையத்தளத்தில் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்படும் என்று நிதி அமைச்சும் ரீச் எனப்படும் அரசாங்கக் கருத்தறியும் பிரிவும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
செவிப்புலன் அற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகை யில் பட்ஜெட் அறிக்கை வாசிக்கப்படும்போது சைகை மொழி யிலும் உரையில் விவரங்கள் மொழிப்பெயர்க்கப்படும். இந்த முயற்சிக்கு நிதி அமைச்சும் சிங்கப்பூர் செவிப்புலன் அற்ற வர்கள் சங்கமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
பட்ஜெட் உரை மீடியாகார்ப் சேனல் நியூஸ் ஏ‌ஷியா ஒளிவழியிலும் ‘938நவ்’ வானொலியிலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படும். மேலும் சேனல் நியூஸ் ஏ‌ஷியா, ‘டோகல்’ இணையப் பக்கங்களிலும் உரை நேரடியாக ஒளிபரப்பப்படும். 
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் பட்ஜெட் உரை தொடர்பான செய்திகளைத் தனது அனைத்து ஊடகத் தளங்களிலும் விரிவாக வெளியிடும்.