3,162 பிடிஒ வீடுகள் விற்பனை

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) இவ்வாண்டு தனது முதல் விற்பனை நடவடிக்கையில் 3,739 வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த வீடுகளில் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் (பிடிஒ) 3,162 வீடுகள் உள்ளடங்கும். இவை ஜூரோங் வெஸ்ட், செங்காங் ஆகிய முதிர்ச்சி அடையாத வட்டாரங்களிலும், முதிர்ச்சி அடைந்த காலாங் வாம்போ வட்டாரத்திலும் கட்டப்படவுள்ளன.

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் இரண்டு அறை ‘ஃப்லெக்சி’ அடுக்குமாடி வீட்டு விலைகள் 95,000 வெள்ளி  (மானியங்கள் இல்லாமல்) முதல் தொடங்குகின்றன. காலாங் வாம்போவிலுள்ள நான்கு அறை வீடுகளுக்கான விலை 523,000 வெள்ளி (மானியங்கள் இல்லாமல்) முதல் தொடங்குகின்றன.  

மேலும், கடந்தாண்டு மே மாதத்தில் நடந்த எஞ்சியுள்ள வீடுகளின் விற்பனையில் மீதமிருக்கும் 577 வீடுகள் மீண்டும் இம்முறை விற்பனைக்கு (ஆர்ஓஎஃப்) விடப்பட்டுள்ளன. இரண்டு அறை  ‘ஃப்லெக்சி’ வீடுகள் 166, நான்கறை வீடுகள் 129, ஐந்தறை வீடுகள் 10, மூன்று தலைமுறை வீடுகள் 96, மூன்று ‘எக்சிகியூட்டிவ்’ வீடுகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

விண்ணப்பதாரர்கள் ‘பிடிஒ’ அல்லது ‘ஆர்ஓஎஃப்’ விற்பனை நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் இவ்விரண்டுக்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியாது.