ஜனவரி மின்தடைக்கு மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகலாம்

பிரைட் ஹில் துணை மின்நிலைய மின்மாற்றி ஒன்றில் ஏற்பட்ட கோளாறே, ஜனவரி 26ஆம் தேதி 27,000 குடியிருப்பாளர்கள் ஒன்றரை மணி நேர மின்தடையை அனுபவிக்க காரணமாக இருக்கலாம் என எரிசக்தி சந்தை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னோட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வர்த்தக தொழில் மூத்த துணையமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.
அதில் ஏற்பட்ட தீ கண்டறியப்பட்டதும் பாதுகாப்புக் கருவிகள் தனிச்சையாகச் செயல்பட்டு, கோளாறுள்ள மின்மாற்றி தனிமைப்படுத்தப்பட்டது. இதனால், மின் தடை ஏற்பட்டது என்று தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் பல பகுதிகளில் 2018 செப்டம்பர் மாதம் 146,000க்கும் மேற்பட்டோரைப் பாதித்த மின் தடையைத் தொடர்ந்து இந்தத் தடை ஏற்பட்டது. கடந்த ஐந்தாண்டு களில் மின்மாற்றி கோளாற்றால் ஏற்பட்ட தடை இதுதான். 
சிங்கப்பூரின் மின்சக்தி கட்டமைப்பு உலகிலேயே ஆக நம்பகரமானதாக உள்ளது என்பதை வலியுறுத்திய அமைச்சர் கோ, கடந்த ஆறு ஆண்டுகளில் சிங்கப்பூரில் வாடிக்கை யாளர்கள் சராசரியாக 12 விநாடிகள் முதல் 4.2 விநாடிகள் வரை ஆண்டு மின்தடையை அனுபவித்தனர் என்றார்.