நால்வர் கும்பல் கைது; $96,000க்கும் மேற்பட்ட கடன் அட்டை பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு

நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து $96,000க்கும் மேற்பட்ட கடன் அட்டை மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

‘யூட்ரிப்’ எனும் பல நாணய மின்னியல் பணப்பை செயலி மூலம் மோசடி செயல்கள் பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறையினருக்கு இம்மாதம் 1ஆம் தேதி புகார் கிடைத்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் 24 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சென்ற மாதம் வரையில் 18 சந்தேகக் கணக்குகளின் மூலம் குறைந்தது 85 மோசடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகத் தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்றும் நேற்று முன்தினமும் போலிஸ் வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர். மேலும் 15 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

முறைகேடான கணினிப் பயனீடு, இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள் குற்றம் சாட்டப்படலாம் என்று நம்பப்படுகிறது.   

குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 அபராதமோ அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.