சென்ற ஆண்டு வரலாறு காணாத சுற்றுப்பயணிகள் வருகையும் செலவும்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

உலகளவில் சிங்கப்பூர் மீதான கவனம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகளின் வருகையும் அவர்கள் செலவிட்ட பணமதிப்பும் சென்ற ஆண்டு மாபெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பயணிகளின் மொத்த வருகை 6.2 விழுக்காடு உயர்ந்து 18.5 மில்லியனாக உள்ளது. அவர்கள் செலவு செய்த மொத்தத் தொகை 1 விழுக்காடு உயர்ந்து $27.1 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க மதிப்பீடுகளை சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

உலகின் கவனம் சிங்கப்பூர் மீது படுவதற்கு இரண்டு அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலைச் சந்திப்பு அதில் ஒன்று.

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுதும் ஆசிய நடிகர்களைக் கொண்டு சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட ‘கிரேசி ரிச் ஏஷியன்ஸ்’ ஹாலிவுட் படம் மற்றொரு காரணமாகக் கூறப்பட்டது.

வாரியம் முன்னுரைத்ததைவிட சுற்றுபயணிகள் வருகை அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் செய்த செலவு மதிப்பீடு அந்த அளவிற்கு உயரவில்லை.

கணிசமான சுற்றுப்பயணிகள் ஒரு நாள் சுற்றுலா அல்லது நெடுந்தொலைவுப் பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு வந்து குறுகிய காலம் மட்டுமே தங்கியதால் செலவு மதிப்பு உயர்வு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.