தனியார் மேம்பாடுகளைவிடப் பொது வீடமைப்புக்கான நிலத்தின் மதிப்புக் குறைவு

தனியார் வீடமைப்பு மேம்பாடுகளுக்காக 2015க்கும் 2018ஆம் ஆண்டிற்கும் இடையில் அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட நிலத்தின் சராசரி விலை ஒரு சதுர மீட்டருக்குச் சுமார் $7,000ஆக இருந்தது. ஆனால் இந்த விலை மத்திய மையப் பகுதிக்குப் பொருந்தாது.

அதே காலகட்டத்தில், முதிர்ச்சியடைந்த வீடமைப்புப் பேட்டைகளில் ஒரு சதுர மீட்டர் நிலத்திற்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) சராசரியாக சுமார் $2,000 செலுத்தியது.

நாடாளுமன்றத்தில் நேற்று அல்ஜூனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மனாப்பின் கேள்விக்குப் பதிலளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், இந்த விவரங்களை வெளியிட்டார்.

தலைமை மதிப்பீட்டாளர் மதிப்பிட்டுள்ள சந்தை மதிப்பில் அரசு நிலம் வீவகவிடம் விற்கப்படுகிறது என்று திரு வோங் குறிப்பிட்டார்.

“சந்தை நிலவரத்தையும் மதிப்பீட்டுக் கோட்பாடுகளையும் பொறுத்து நில மதிப்பீடு செய்யப்படுகிறது,” என்றார் அவர்.

தனியார் வீடமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பை ஒப்பிடுகையில், பொது வீடமைப்பிற்கான நிலத்தின் மதிப்பு குறைவாக இருப்பதை அவர் சுட்டினார்.