விவியன்: ரோஹிங்யா அகதிகளுக்கு ஆசியான் ஆதரவு

மியன்மாரைவிட்டு வெளியேறிய ரோஹிங்யா அகதிகள் பாது காப்பான, கண்ணியமிக்க முறையில் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நாடு திரும்ப போதுமான அளவு தன்னம்பிக்கை தேவை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அகதிகள் நாடு திரும்புவதற்கான செயல்முறையைத் தொடங்குவதற்குரிய காலக்கெடுவை சிங்கப்பூர் அல்லது ஆசியானால் விதிக்க முடியாது என்று விளக்கிய அவர், ஆனால், அகதிகள் நாடு திரும்பும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்க ஆசியான் தயாராக இருக்கும் என்றார்.
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி வசதிகளை வழங்க உதவுவதுடன் சமயங்களுக்கு இடையிலான கலந்துரை யாடலையும் ஆசியான் ஊக்குவிக்கும் என அமைச்சர் கூறினார். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் 2017ல் 700,000க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.