பண்ணை உரிம விதிமுறைகளை மீறிய ஆடவருக்கு அபராதம்

பண்ணை உரிம விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) அபராதம் விதித்துள்ளது. ‘காய் ஹொங் எக்வடிக்ஸ்’ நீர்விலங்குப் பண்ணையின் உரிமையாளர் 58 வயது திரு டோ கே ஹோங்கிற்கு $1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்ணை நிலத்தின் தவறான பயன்பாடு பற்றி பொதுமக்களில் ஒருவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து ‘ஏவிஏ’, சிங்கப்பூர் நில ஆணையம், மனிதவள அமைச்சு ஆகியவை இணைந்து அந்தப் பண்ணை வளாகத்தில் சோதனை நடத்தின. பண்ணையில் பெரிய குப்பைத் தொட்டிகள் பல (skip tanks) இருந்ததாகச் சோதனை நடத்திய அதிகாரிகள் கண்டனர். மேலும், பண்ணை ஊழியர்கள் அல்லாத இரண்டு வெளிநாட்டினர் அங்கு தங்கி வந்ததாகவும் அறியப்பட்டது. 

சிங்கப்பூரின் நிலப் பற்றாக்குறையால் பண்ணைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பண்ணை தொழிலுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படவேண்டும் என்றது ஏவிஏ. ஏவிஏயின் பண்ணை விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்..