ஈசூனில் தீ; மருத்துவமனையில் குடியிருப்பாளர்

புளோக் 221 ஈசூன் ஸ்திரீட்டில் 21ல் இன்று காலை நடந்த தீச்சம்பவத்தில் புகையை அளவுக்கு அதிகமாக சுவாசித்ததால் குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

உதவிக்கான அழைப்பு காலை 9.15 மணிக்கு வந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அடுக்குமாடி வீட்டின் வரவேற்பு அறையிலும் சமையலறையிலும் தீ பரவியதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள் சற்று நேரத்திலேயே தீயை அணைத்தனர்.

“அளவுக்கு அதிகமாகப் புகையை சுவாசித்த ஒருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர் அந்த அடுக்குமாடி வீட்டில் வசித்த ஒரு பெண் என்று லியன்ஹ வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது.