ஈசூன் வீட்டில் தீ: புகையை முகர்ந்த குடியிருப்பாளர் மருத்துவமனையில்

காணொளியில் இருந்து எடுக்கப்பட்டது.

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஒன்பதாம் மாடி வீட்டில் தீப் பிடித்துக்கொண்டதால், அங்கிருந்து கிளம்பிய புகையை முகர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 221ல் மூண்ட தீச்சம்பவம் பற்றி காலை 9.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டில் சமையலறை, வரவேற்பறை ஆகியவற்றில் உள்ள பொருட்களில் தீப் பிடித்துக்கொண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சிறிது நேரத்தில் தீ அணைக்கப் பட்டது. “புகையை அதிகமாக முகர்ந்ததால் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்,” என்று அது கூறியது. 
அந்த நபர் பாதிக்கப்பட்ட வீட்டின் குடியிருப்பாளர் என்று அறியப்படுகிறது. தீச் சம்பவம் குறித்த விசாரணையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தொடங்கியுள்ளது.