முன்னாள் சக ஊழியரிடமிருந்து $4 மி. ஏமாற்றியவருக்கு 9 ஆண்டு சிறை

தனது முன்னாள் சக ஊழியரிடமிருந்து கிட்டத்தட்ட $4 மில்லியன் பணத்தை ‘முதலீட்டுத் திட்டத்தில்’ போடச் சொன்ன 55 வயது திரு சியோங் எ மெங்குக்கு நேற்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சியோங்கின் மோசடிச் செயலால் அவரது முன்னாள் சக ஊழியரான 65 வயது திரு எடி டான் ஹக் ‌ஷூன் தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் இழந்துவிட்டார். அந்த முதலீட்டுத் திட்டத்தில் பணத்தைப் போட, டான் பல்வேறு இடங்களில் கடன் வாங்கினார். அதைத் திருப்பிச் செலுத்த அவர் இன்னும் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.
சியோங்கும் டானும் முன்பு ஒரு வங்கியில் வேலை செய் தனர். சியோங் 1997ல் ஆட்குறைப்பு செய்யப்பட்டவுடன் அவர்களிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டில் சந்தித்தனர். அதே ஆண்டு மே மாதத்தில், சியோங் சொன்ன ‘முதலீட்டுத் திட்டத்தின்’ மூலம் உலகில் உள்ள பல சூதாட்டக் கூடங் களிலிருந்து வருமானம் கிடைக்கும் என்று நம்பி டான் அவரது சேமிப்பு முழுவதையும் ‘முதலீடு’ செய்தார். 
சியோங் அந்தப் பணத்தைக் கொண்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வாங்கினார், தனது கடனைச் செலுத்தினார், தனது சூதாட்டக்கூட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார். சியோங் மலேசியாவிலிருந்து வாங்கி வந்த போலியான உச்ச நீதிமன்றம், கீழ் நீதி மன்றத்தின் முத்திரைகளைப் பயன்படுத்தி முதலீட்டுப் பத்திரங்களில் அதைப் பதித்து டானை நம்ப வைத்தார். 
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று டான், சியோங்குக்கு எதிராக போலிசில் புகார் கொடுத்தார்.