மேல்நிலைத் தேர்வு முடிவுகள்- அடுத்த வெள்ளிக்கிழமை

கடந்தாண்டு பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் தங்களது முடிவுகளை அடுத்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22) பெறலாம். தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தங்களது முடிவுகளைத் தத்தம் பள்ளிகளில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து பெறலாம் என்று கல்வியமைச்சு இன்று தெரிவித்தது. தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் அதே நாளில் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்.

பிற்பகல் 2.30 மணியிலிருந்து அவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி தங்களது முடிவுகளைக் காணலாம். மேல்நிலைத் தேர்வு சான்றிதழ் பெற்றவர்கள் விருப்பப்பட்டால் பலதுறைத் தொழிற்கல்லூரிகளின் 110 பாடத் துறைகளில் முன்கூட்டியே சேர்வதற்குக் கல்வி அமைச்சு புதிதாக ஏற்பாடு செய்திருக்கிறது. 

இதற்கு முன்னர், சான்றிதழைப் பெற்றவர்கள் ஓராண்டுக்குப் பின்னர்தான் பலதுறைத் தொழிற்கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே பலதுறைத் தொழிற்கல்லூரிகளின் மாணவர் சேர்ப்பு நடவடிக்கை முடிவடைவது இதற்குக் காரணம். ஆனால் புதிய ஏற்பாட்டின்படி, பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல் அரை கல்வியாண்டுக்குப் பின்னரும் அவர்கள் அங்கே சேரலாம்.