பிரதமர் லீ: பாதுகாப்பு அதிமுக்கியமாகக் கருதப்படுகிறது

பாதுகாப்பைத் தாமும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் அதிமுக்கியமாகக் கருதுவதாக பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். ராணுவப் பயிற்சிகள் சம்பந்தப்பட்ட அண்மைய மரணங்களைப் பற்றி திரு லீ தமது பொதுப்படையான கருத்துக்களை முதன்முதலாக வெளியிட்டிருக்கிறார்.

“ஆக அண்மைய சம்பவங்கள் மிகுந்த மனவலியைத் தந்திருப்பவை. ஏனென்றால் விலைமதிப்பில்லாத உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.  இது அனைவருக்கும், குறிப்பாக குடும்பங்களுக்கு எவ்வளவு வேதனையாக உள்ளது என்பது எனக்குத் தெரியும்,” என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

அலோய்‌ஷியஸ் பாங் போன்ற பிரபலங்களுக்கு இது நேரும்போது உணர்வுபூர்ணமான தாக்கம் மேலும் அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பயிற்சி பாதுகாப்பை சிங்கப்பூர் ஆயுதப் படை வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் லீ கூறினார். ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடையும்போது சிங்கப்பூர் ஆயுதப் படை மிகவும் கவலை அடைவதாகவும் அவர் கூறினார்.

“உயிரிழந்தவரின் குடும்பத்தினரது உணர்வுகளை அவருடன் சேவையாற்றிய வீரர்கள் நன்கு அறிவார்கள். அவர்களும் அந்த வேதனையை ஆழமாக உணர்வார்கள். ஆயினும், தங்களது சொந்த உணர்வுகளைப் புறந்தள்ளி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்வதுடன் சிங்கப்பூர் ஆயுதப் படைக்குத் தொடர்ந்து தங்கள் கடமையைச் செய்வர்,” என்றும் அவர் கூறினார்.

மரணச் சம்பவத்தை ஆராயும் அதே வேளையில், பயிற்சி முறையை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் மேம்படுத்தும் என்று திரு லீ தெரிவித்தார். “மரண விகிதத்தை பூஜ்ஜியமாக்குவது மிகக் கடினம் என்பது நமக்குத் தெரியும். ஆயினும், ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது என்பதால் இந்த இலக்கை அடைய நாம் தொடர்ந்து பாடுபடுவோம்,” என்றும் அவர் கூறினார்.