$740,000 லஞ்சம் வாங்கிய முன்னாள் கொள்முதல் அதிகாரி

‘கெப்பல் ‌ஷிப்யார்ட்’ நிறுவனத்தின் முன்னாள் மூத்த கொள்முதல் அதிகாரி 2007ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் $740,000க்கும் மேலான தொகையை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதன் தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
போட்டி நிறுவனங்கள் சமர்ப்பித்த ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட பொருள்களின் விலையை நியோ கியன் சியொங், 63, சில விநியோக நிறுவனங்களுக்குத் தெரிவித்தார். தகவலைக் கூறியதற்காக இவ்விநியோக நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வாங்கினார். ஒப்பந்தம் சமர்ப்பிக்கும் இறுதி நாளுக்கு முன் நியோவுடன் தொடர்பு கொள்ளும் விநியோக நிறுவனங்களுக்கு, தகவலைக் கூறியதால் நிறுவனங்கள் அதற்கு ஏற்பத் தங்களின் விலையைக் குறைத்துச் சமர்ப்பித்தன. இதனால் ‘கெப்பல் ‌ஷிப்யார்ட்’ குறைந்த விலையைச் சமர்ப்பித்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து வந்தது. இத்தகைய விலை தொடர்பிலான தகவல்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியவை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித் தார். நியோ ஊழல் தொடர்பில் 26 குற்றச்சாட்டுகளையும் சொந்த ஆதாயத்திற்காக பலன்களை அனுபவித்ததன் தொடர்பில் 28 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதியன்று நியோவுக்குத் தண்டனை விதிக்கப்படும்.