நான்கு நாள் சோதனையில் சிக்கிய $19,000 மதிப்பிலான போதைப்பொருள்

தீவு முழுதும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் $19,000 மதிப்பிலான போதைப்பொருளைக் கைப்பற்றியது. அத்துடன் 92 பேர் போதைப்பொருள் தொடர்பில் கைதாகினர்.
திங்கட்கிழமை அன்று தொடங்கிய சோதனை நடவடிக் கையில் ‘கென்னபிஸ்’, ‘ஹெராயின்’ போன்ற பலதரப்பட்ட போதைப்பொருள் வகைகள் சிக்கின. புவாங்கொக், சுவா சூ காங், கேலாங், ஜூரோங், மார்சிலிங், உட்லண்ட்ஸ், ஈசூன் முதலிய வட்டாரங்களில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. புவாங்கொக் கிரசண்ட் அருகே உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 36 வயது ஆடவரும் 29 வயது பெண்ணும் பிடிபட்டனர். இருவரும் போதைப்பொருள் புழங்கிகள் என்ற சந்தேகத்தில் கைதாகினர்.

போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான கருவிகளும் 114 மாத்திரைகளும் அவ்வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இருவரும் கைதான சமயத்தில் ஐந்து வயது சிறுவனும் ஒன்பது வயது சிறுமியும் அங்கு இருந்தனர். அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட சோதனையில் கைதான பெண் எட்டு மாத கர்ப்பிணி என்றும் அவர் போதைப்பொருள் புழங்கியிருந்தார் என்றும் கண்டறியப்பட்டது. வீட்டில் இருந்த இரு சிறுவர்களும் குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைதான சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.