பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மூழ்கியது 

பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் சிங்கப்பூர் கடற்பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று மூழ்கியிருப்பதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
டோமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ‘ஓ‌ஷியன் கூப்பர் 2’ எனும் விநியோகக் கப்பல் நேற்று முன்தினம் காலையில் பெட்ரா பிராங்கா தீவுக்கு மூன்று கடல்மைல்களுக்கு அப்பால், சிங்கப்பூர் நீரிணையில் மூழ்கியது என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியது. 
சிங்கப்பூர் நீரிணை உலகின் மிக பரபரப்பான கப்பல் மண்டலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் மூழ்கிய செய்தி ஆணையத்துக்கு காலை 7.15 மணிக்குக் கிடைத்தது. 
கப்பலில் இருந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த சிப்பந்தி கள் மூவரைக் காயமின்றி காப்பற்றியது அதன் அருகில் சென்ற ‘ஜாலி ரேச்சல்’ எனும் விநியோகக் கப்பல். இவ்விரு கப்பல்களும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவை. கப்பல் மூழ்கிய இடத்தில் எவ்வித எண்ணெய் கசிவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரணை நடத்துகிறது.